கிரிக்கெட்டுக்கு 50 வயது – இதுவரை 4,267 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன…

சர்வதேச ஒரு நாள் போட்டி அறிமுகமாகி நேற்று 50 ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே மெல்போர்னில் 1970ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி முதல் 1971 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் திகதிவரை நடக்க இருந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக இவ்விரு அணிகள் இடையே 40 ஓவர் அடிப்படையில் சர்வதேச போட்டி ஒன்றை 1971ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதியில் இருந்தே மெல்போர்னில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 190 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.  இந்த இலக்கை ஆஸ்திரேலியா 35 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த போட்டியை ஆரவாரத்துடன் உற்சாகமாக கண்டுகளித்தனர். இது தான் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் உதயமாவதற்கு அடித்தளமாக அமைந்தது.

அத்துடன் அது முதலாவது ஒரு நாள் போட்டியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐ.சி.சி.) ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு நாள் போட்டி அறிமுகமாகி நேற்று 50-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது.

தொடக்கத்தில் ஒரு நாள் போட்டி 60 ஓவர், ஓவருக்கு 8 பந்து என்ற வகையில் நடத்தப்பட்டது. காலப்போக்கில் 50 ஓவர் என்பது நிரந்தரமானது. வீரர்கள் வெள்ளை நிற சீருடையில் இருந்து வண்ண உடைக்கு மாறினர்.

சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் அதிகரிக்க பவர்-பிளே, பிரிஹிட், டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் என்று பல புதுமைகள் புகுத்தப்பட்டன. இதுவரை 4,267 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் அதிகபட்சமாக இந்தியா 990 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளது.

Related Articles

Latest Articles