டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் கிழமை நாட்களில் கிளினிக் வைத்திய பரிசோதனைகளுக்கு வருவோர் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பெருந்தோட்ட மக்களின் வைத்திய சேவைக்காக நிர்மாணிக்கப்பட்டதே கிளங்கன் ஆதார வைத்திய சேவையாகும். இருப்பினும் இவ் வைத்தியசாலையில் மக்கள் பரிசோதனைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வைத்திய பரிசோதனைக்காக விடியற்காலை 4.00 மணிக்கு வந்தாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தாக்கமும் தங்களுடைய வைத்திய பரிசோதனைகளுக்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்திய பரிசோதனையின் போது இடம்பெறும் கெடுபிடிகளால் உரிய முறையில் வைத்திய பரிசோதனைகளையும் பெற்றுக்கொள்ள முடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் கவலைத்தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையின் சுற்றுபுறத்தில் துர்நாற்றம் வீசுவதால் நீண்ட நேரம் இருக்க முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆதலால் தாம் எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு ஒன்றை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
