” பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம். அதனால்தான் பிரதமர் சந்திப்புக்கு வாய்ப்பு வழங்கியும் அதனை பயன்படுத்தவில்லை. சர்வதேசத்துக்காகவே கூட்டமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்.” – என்று இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று சபைக்குள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றிருந்ததாகவும், அவர்களை சந்திக்க குறைந்தபட்சம் அதிகாரி ஒருவர்கூட வரவில்லையெனவும் சுட்டிக்காட்டி இருந்தனர். இது தொடர்பில் ஜனாதிபதி செலயகத்திடம் நான் வினவினேன். ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக விசேட செயலாளர் ஒருவரும், பணியாள் குழுவினருக்கும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்குச்சென்றுள்ளனர்.
அவ்வேளை, ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கோரியுள்ளனர். இன்றைய தினம் ஜனாதிபதி வேறு வேலைகளில் இருப்பதால், சந்திப்பு முடியாதென அறிவிக்கப்பட்டுளளது. அத்துடன், பிரதமரை உடன் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு எம்.பிக்களுடன் அலரிமாளிகையில் பேச்சு நடத்துவதற்கு பிரதமரும் சந்திப்புக்கு தயாராகவே இருந்துள்ளார். அதனை இவர்கள் நிராகரித்துள்ளனர். பிரதமரை வீதிக்கு அழைத்துள்ளனர்.
எனவே, கூட்டமைப்பினர் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். சந்திப்புக்கு நேரம் வழங்கியும் அதனை பயன்படுத்தவில்லை. இதன்மூலம் அவர்களின் நோக்கம் என்னவென்பது தெளிவாகின்றது. பிரச்சினைக்கு தீர்வைத் தேடுவது அவர்களின் நோக்கம் அல்ல. சர்வதேச கவனத்தை ஈர்க்கவே இப்படியான செயலில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி சந்திப்புக்கு நேரம் வழங்குவார். எனவே, அங்கு சென்று பேச்சு நடத்துங்கள். ” – என்றார்.