” கூலிகளை பராமரிக்கவா தலைமையகம்” – வேலுகுமார் ஆவேச உரை

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை கூலித்தொழிலாளிகளாக வைத்து – பராமரிப்பதற்கு கட்டிடங்கள் திறக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டது. எனவே,கூலித்தொழில் முறைமையை ஒழித்து, சுதந்திரமான மலையகத்தை கட்டியழுப்ப வேண்டும். அதற்கானதொரு அடையாளமே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தாயகம்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,

” தமிழ் முற்போக்கு கூட்டணியின் தாயகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது வெறும் கட்டிட திறப்பு விழா அல்ல. மலையக சமூகத்தினுடைய அடையாளத்தை பிரதிபலிக்கும் நிகழ்வாகும். அதாவது ஒரு தேசிய இனத்துக்குரிய அம்சத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.

கடந்த 200 ஆண்டுகளில் மலையகத்தில் பல திறப்பு விழாக்கள் நடந்தன. பெருந்தோட்ட மக்களை கூலித்தொழிலாளர்களாக பராமரிக்கவே இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. இனியும் அவ்வாறான விடயங்களுக்கு இடமில்லை. கூலித்தொழில் முறைமையை ஒழித்து, தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அதற்கான அடையாளமே இது. சுதந்திரமான மலையக சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவைப்பாடு உள்ளது. அதற்கான ஆரம்பமாக இந்த தலைமையகம் அடையாளப்படுத்தப்படுகின்றது.

எனவே, கூலித்தொழில் முறைமையை ஒழித்து புதிய மாற்றத்துக்குள் அடியெடுத்து வைப்பதற்கான தலைமைத்துவத்தையே எமது தலைவர்கள் வழங்க வேண்டும். மாறாக கூலித்தொழிலாளர்களாக எமது மக்களை பராமரிப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்கக்கூடாது.” – என்றார்.

Related Articles

Latest Articles