கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா, தமிழினியன் விகடன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெ.டி.விமல் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுகவனம், “கொங்குப் பகுதியை பின்னணியாகக் கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்திருந்தாலும், இதுவரை சொல்லப்படாத கதையை இப்படம் விவரிக்கும். நிலத்தில் நன்றாக உழைக்கும் பாட்டாளியை நல்லபாடன் என்று அழைப்பது கொங்கு வட்டார வழக்கம். இம்மண்ணில் நிலங்களற்று உழைக்கும் மனிதர்களின் கதை தான் இது.

ஒண்டி முனி எனும் சிறு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்கள் இவர்கள். அவர்கள் கொண்ட கடவுள் நம்பிக்கை, ஆதிக்க மனம் கொண்டவர்களின் உழைப்பு சுரண்டல்கள், மனிதர்களின் வாழ்வு முறை,நல்லபாடனின் போராட்டம் உள்ளிட்டவற்றை இப்படம் பேசுகிறது. படம் பார்க்கும் அனைவரையும் ஒரு கிராமத்தில் வாழ்ந்த உணர்வை கதை ஏற்படுத்தும். இது மக்களுக்கான கலை, நிச்சயம் அவர்களைச் சென்றடையும் என நம்புகிறேன்” என்றார். நவ. 28-இல் இப்படம் வெளியாகிறது.

 

 

Related Articles

Latest Articles