நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், கைகளைக் கழுவுதல் போன்ற சுகாதார முறைகளை கடைபிடிக்குமாறு இ.தொ.காவின் உப செயலாளரும் சர்வதேச வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
” மலையக பகுதி எங்கும் தொற்று நோய் பாதுகாப்பிற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பல விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுத்துள்ளார்.
அனைத்து தோட்டப் பகுதிகளிலும் வெளி பிரதேசங்களில் இருந்து வருகைதருவோரின் விபரங்களை தோட்ட நிர்வாகம் மற்றும் தோட்ட சமூகநல உத்தியோகத்தர்கள் திரட்ட வேண்டும் என பணிக்கபட்டுள்ளது.
இதேவேளை நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை இரத்தினபுரி, கேகாலை ஆகிய பகுதியில் உள்ள அரசாங்க அதிபர்களுக்கும் இதுதொடர்பில் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் மற்றும் அமைச்சின் ஊடாக சுகாதார நிலைமைகளை கண்காணிப்பதற்கு குழு ஒன்றை அமைத்து ஒவ்வொரு பிரதேசங்களிலும் அதாவது நுவரெலியா, ஹட்டன், கண்டி மாத்தளை, காலி, கேகாலை, இரத்தினபுரி பதுளை போன்ற அனைத்து மனித வள அபிவிருத்தி நிதியத்தின் கிளைப் பணிமனையில் உள்ள அதிகாரிகள் அப்பிரதேச சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் தனிமைபடுத்தபட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்கு அங்குள்ள தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையடபட்டுள்ளது, அவர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம் என்றும் பாரத் அருள்சாமி குறிப்பிட்டார்.