கொழும்பிலுள்ள பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலையொன்றின் போக்குவரத்து நெருக்கடியினை தீர்க்க பாடசாலை சமூகம் பொலிஸாரின் உதவியை நாடியிருந்தது.
பாடசாலை பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் பெற்றோர்கள், மாணவர்களை இறக்குவதற்கும் – ஏற்றுவதற்கும் பொலிஸாரினால் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது . அந்த இடத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பாரிய பேருந்துகள் நிறுத்தப்படுவதாக பெற்றோர்களும் பாடசாலை சமூகமும் விசனம் தெரிவித்துள்ளனர் .
இந்த பேருந்துகள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் அமைப்பாளர் பால சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது .
கடந்த பாடசாலை அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டத்தில் இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்யுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்தபோது மனோவின் அமைப்பாளர் பாலசுரேஷ் அதனை எதிர்த்து அடாவடித்தனம் செய்திருந்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், பெற்றோர் அவற்றை நிவர்த்தி செய்யும் விதமாக கையெழுத்து வேட்டை ஒன்றினை சேகரித்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளனர்.
அண்மையில் பாடசாலை நிர்வாகம் ‘No parking’ மற்றும் ‘Drop and Pick up’ சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்ததனை அடுத்து பொலிஸார் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இந்த பிரச்சனையை தீர்க்கும் முகமாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை சேவை வாகன உரிமையாளர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருடன் கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இக்கூட்டத்தில் அழையா விருந்தாளியாக மனோ கலந்து கொண்டு, பாடசாலை நிர்வாகம் , பெற்றோர் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு எதிராகவும், தனது அமைப்பாளர் பாலசுரேசுக்கு ஆதரவான முடிவுகளை எடுக்க நிர்பந்திக்கும் கருத்துக்களை தெரிவித்துள்ளார், இதற்கு ஆட்சேபனை தெரிவித்த பாடசாலை சமூகத்தை சேர்ந்தவர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
பாடசாலை உள்விவகாரங்களில் அழையா விருந்தாளியாக கலந்து கொண்ட மனோவிற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து உடனடியாக பாடசாலையை விட்டு கிளம்பினார் .
பாடசாலை நேரத்தில் மேற்படி பால சுரேஸின் பேருந்து ஊழியர்கள் பெற்றோர்களிடம் அடாவடியாக நடந்துகொள்வதுடன், தவறான வார்த்தைகளால் திட்டுவதுடன் , சீட்டாடுவது , சிகரட் புகைப்பது போன்றவற்றினால் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க செயற்பாடுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மக்கள் பக்கம், நீதியின் பக்கம் நிற்காமல் ,
பொறுப்பற்ற விதத்தில் பக்கச்சார்பாக செயற்படுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
( இந்த சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் தரப்பு, தமது விளக்கத்தை வழங்கினால் அதனையும் வெளியிடுவதற்கு மலையக குருவி தயாராகவே உள்ளது.)