பிரித்தானியாவின் பாசிங்ஸ்டோக் – டீன் போரோ உள்ளூராட்சி மன்ற தேர்தலில், இலங்கை தமிழர் ஒருவர் உள்ளூராட்சி மன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த மூன்று உள்ளூராட்சி மன்ற தலைவர்களில் ஒருவராக இலங்கை தமிழரான ஜெய் கணேஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய் கணேஷ் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆரம்பிக் கல்வியைக் கற்றதோடு, கொழும்பு இந்து கல்லூரியில் மேல் நிலைக் கல்வியைத் தொடர்ந்துள்ளார்.
லண்டன் பெருநகர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர், உள்ளூர் மன்ற அரசாங்கத்தில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் இருந்தபோது இவர், பாடசாலை நாட்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (எஸ்.எல்.பி.சி) பகுதிநேரம் பணியாற்றியுள்ளார். இவர் 2012 முதல் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தனது வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
“நான் வாழும் பகுதியில் உள்ளூராட்சி மன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டிருப்பது ஒரு முழுமையான மரியாதையாகும். எனக்கு வாக்களித்த அனைத்து தரப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும், பாசிங்ஸ்டோக் மற்றும் டீன் போரோவை ஒரு சிறந்த இடமாக மாற்ற கடினமாக உழைப்பேன் ” என தெரிவித்துள்ளார்.