கோட்டாபய ராஜபக்ஷ கௌரவமாக பதவி விலக வேண்டும்- ஹரீன் பெர்ணான்டோ

நாட்டு மக்கள் தேர்தல் வேண்டுமென கோரவில்லை, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவே போராட்டம் நடத்துகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இந்த நாடாளுமன்றில் எத்தனையோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் 225 உறுப்பினர்களையும் மக்கள் வெறுக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? இதுதான் இந்த நாட்டின் நிலைமை எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கு சம்பளம் வேண்டாம் எனவும், நாடாளுமன்றில் உள்ள உணவகத்தில் உணவு உட்கொள்ள மாட்டேன் என தெரிவித்த ஹரீன், அனைத்து எம்.பிக்களுக்கும் இவ்வாறு கூற முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

நாடு இப்போது பாரிய பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ கௌரவமாக பதவி விலக வேண்டும். மக்களும் அதையே கோருகிறார்கள்.

கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பொருளாதாரம் தொடர்பில் நன்கு கற்ற ஹர்ஷ டி சில்வாவை தற்காலிகமாக ஜனாதிபதியாக்குவோம். அவருக்கு தெரியும் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு தீர்க்க வேண்டுமென்பது. அதை விட்டுவிட்டு பதவிக்காகவோ, தேர்தலுக்காகவோ போட்டியிடவேண்டிய நேரம் இது இல்லை எனவும் குறிப்பிட்டார்.

அப்படி இல்லையென்றால், மக்கள் விடுதலை முன்னணியாவது ஒரு அணியாக திரட்டிக்கொண்டு தற்காலிகமாக அரசை பொறுப்பேற்று செய்து காட்டுவதற்கு வாய்ப்பளிப்போம். என தெரிவித்தார்.

Related Articles

Latest Articles