கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளது.
கோப் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இணங்கினால் கோப் குழுவின் தலைவர் பதவி விலக வேண்டும். நிலையியற் கட்டளைச் சட்டத்தில் உள்ள இந்த ஏற்பாடுகளுக்கமையவே இந்த பிரேரணை கொண்டுவரப்படுகின்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நாளை திங்கட்கிழமை குறித்த பிரேரணை கையளிக்கப்படவுள்ளது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை தொடர்பான விசாரணையின்போது கோப் குழுவின் தலைவரான மொட்டு கட்சி எம்.பியான ரஞ்சித் பண்டார பக்கச்சார்பாக செயற்பட்டார் எனவும், அவரின் மகனைக்கூட கோப் குழுவுக்கு அழைத்துவந்துள்ளார் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் கோப் குழுவில் இருந்து விலகுமாறு அவருக்கு எதிரணிகள் அழுத்தம் கொடுத்துள்ளன.