ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீண்டும் கட்சிக்குள் வருவதற்கு முயற்சிக்கின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
அந்த உறுப்பினர் யாரென்பது தொடர்பில் மரிக்கார் வெளிப்படையாக குறிப்பிடவில்லை. எனினும், ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எனக் குறிப்பிட்டார்.
அவருக்கு பதிலாக புதிய தொகுதி அமைப்பாளரை ஐக்கிய மக்கள் சக்தி நியமித்துள்ளது எனவும் மரிக்கார் கூறியுள்ளார்.
வடிவேல் சுரேஷ் எம்.பியையே பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, ஐக்கிய மக்கள் சக்தி புதியவர் ஒருவரை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மரிக்காரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் வழங்கிய பதில்களும் வருமாறு,
கேள்வி – ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து கட்சி மாறிய ஒருவர் மீண்டும்வர முற்படுகின்றார் எனக் கூறியிருந்தீர்கள்?
பதில் – ஆம், வருவதற்கு முயற்சிக்கின்றார்.
கேள்வி – யார் அவர்?
பதில் – ஒருவர் வர முற்படுகின்றார்.
கேள்வி – ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் சென்றவரா?
பதில் – ஆம்.
கேள்வி – அவர் அந்த பக்கம் சென்றா உள்ளார்?
பதில் – இது பற்றி கேட்டபோது, நான் அப்படி செல்லவில்லை என அவர் கூறினார். கட்சி உறுப்புரிமையில் இருப்பதாகவும் கூறினார்.
கேள்வி – அவர் ஆணா, பெண்ணா?
பதில் – ஆண்.
கேள்வி – கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாரா?
பதில் – அவருக்கு பதிலாக அமைப்பாளர் ஒருவரை நியமித்துள்ளோம். உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளாரா என தெரியாது.
கேள்வி – எந்த தொகுதி?
பதில் – ஊவா மாகாணத்தில் உள்ள தொகுதி.
கேள்வி – வடிவேல் சுரேஸா?
பதில் – அதை நீங்கள் முடிவெடுக்கவும்.