முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவை பஸில் ராஜபக்சவே ஐக்கிய மக்கள் சக்திக்குள் களமிறக்கியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது என்று அக்கட்சியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் மீண்டும் அரசியலுக்கு வருவதை நான் எதிர்க்கின்றேன். மஹிந்த ராஜபக்ச போன்ற தலைவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் மக்கள் அச்சப்பட வேண்டும். ஏனெனில் பழிவாங்குவார்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்துவார்கள், சிறைகளில் அடைப்பார்கள்.
ராஜபக்சக்களின் கதை முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டிருந்தாலும் எமது நாட்டு அரசியல் கலாசாரம் பிரகாரம், அவர்கள் இலகுவில் அரசியலில் இருந்து விடுபடபோவதில்லை. பண பலம் உள்ளது, நாடு பூராகவும் அவர்களின் சகாக்கள் உள்ளனர். பஸில் ராஜபக்சவே தயா ரத்னாயக்கவை ஐக்கிய மக்கள் சக்திக்குள் அனுப்பியுள்ளார் என எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
ராஜபக்சக்கள் அவ்வளவு எளிதில் அரசியலை விடமாட்டார்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கேனும் முற்படுவார்கள்.” – என்றார்.