பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனு தனக்கு வழங்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் அழுத்தம் காரணமாகவே தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று சஞ்சய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின்போது தனது தொகுதியில் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற வைப்பதற்கு கடுமையாக பாடுபட்டதாகவும், எனினும், ஒரு சிலரின் அழுத்தங்களுக்கு கட்சி பணிவது கவலையளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்மைபோன்ற படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், ஒழுக்கமற்ற அரசியல்வாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தி பலவீனமடைந்துவிடும் எனவும் லெட்சுமணன் சஞ்சய சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்த குற்றச்சாட்டை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் மறுத்துள்ளார்.