சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தில் மலையக மக்கள் நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவர். ரணசிங்க பிரேமதாசவைப் போன்று அவரது புதல்வரான சஜித் பிரேமதாசவும் எமது மக்களுக்கு நன்மை செய்வார் என நம்புவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
200 ஆண்டுகளாக மலையக மக்கள் கூலித் தொழிலாளர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அந்த மக்களுக்கு வீட்டுரிமையோ, நில உரிமையோ இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் எம்மால் ஓரளவு வீட்டுரிமை மற்றும் நில உரிமை பெற்றுக் கொடுக்கப்பட்டது. எனினும் அதனை எம்மால் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.
எனவே எதிர்காலத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் அந்த மக்களை நிச்சயமாக சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதோடு, அவர்களுக்கு அதற்கான காணி உரிமையும் பெற்றுக் கொடுக்கப்படும். மலைய மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது, அதனை மீளப் பெற்றுக் கொடுத்த ரணசிங்க பிரேமதாசவைப் போன்று அவரது புதல்வரான சஜித் பிரேமதாசவும் எமது மக்களுக்கு நன்மை செய்வார் என்று நம்புகின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அதன் பின்னர் நில உரிமை மற்றும் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்பதாக வழங்கியுள்ள வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். மக்கள் எம்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தைப் போன்று இனிவரும் காலங்களிலும் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றார்.