” முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று கைகோர்த்துள்ள எதிர்க்கட்சிகள் தான் கடந்த காலங்களில் ‘ரணிலை சிறைக்கு அனுப்பினால் தான் உறக்கம் வரும்’ என்றார்கள். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே ரணில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவை சவாலுக்குட்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும்.” – என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
” அரச நிதி மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் இருதரப்பிலும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணையளிப்பதற்கு போதுமான காரணிகள் இல்லாததால் அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இன்று நீதிமன்றம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுபவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை கிடைத்திருந்தால் நீதிமன்றத்தை புகழ்வார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்தவுடன் தேர்தல் காலத்தில் முட்டிமோதிக்கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளார்கள்.இவர்களில் 99 சதவீதமானோர் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.தமது குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் தான் இவர்கள் முன்னெச்சரிக்கையாக ஒன்றிணைந்துள்ளார்கள்.
இவர்களின் கூட்டிணைவு எமக்கு சவாலல்ல, ரணிலை சிறைக்கு அனுப்பினால் தான் உறக்கம் வரும்’ என்று கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் குரல் எழுப்பியவர்கள் தான் இன்று அவருக்காக ஒன்றிணைந்துள்ளார்கள்.நாட்டு மக்கள் முதலில் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
சிறு குற்றங்களுக்கு தண்டபணம் செலுத்த முடியாமல் எத்தனை பேர் இன்றும் சிறையில் உள்ளார்கள். அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்யும் தவறுகளை பெரிதுப்படுத்த கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி ஒருவர் குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் அவரது ஆட்சியில் எவ்வாறு சட்டவாட்சி செயற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை மக்கள் ஆராய வேண்டும்.
அதிகாரத்தில் இருந்தவர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என்றால் சட்டத்தின் மீது மக்களுக்கு எவ்வாறு நம்பிக்கை தோற்றம் பெறும். எவ்வாறு சட்டவாட்சியை உறுதிப்படுத்துவது.ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து நாளை கொழும்புக்கு ஒரு தரப்பினர் வருவதாக குறிப்பிடப்படுகிறது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நீதிமன்றத்தின் உத்தரவை சவாலுக்குட்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றார்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.