மெத்தியூஸ், சந்திமால் சதமடித்து அசத்தல்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் சதமடித்து அசத்தியுள்ளனர்.

இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான அந்த டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 198 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்கள் பெற்றிருந்தது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் மதுஷ்க 37 ஓட்டங்களுடனும் திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் கை கோர்த்த மெத்யூஸ் – சந்திமால் இணை சிறப்பாக விளையாடி அணியை வலுவான நிலையை நோக்கி கொண்டு சென்றது.

சிறப்பாக விளையைடிய இருவரும் சதமடித்து அசத்தினர். சதமடித்த சிறிது நேரத்திலேயே சந்திமால் 107 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மெத்யூஸ் 141 ஓட்டங்கள் அடித்திருந்தபோது ஹிட் விக்கெட் முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

2-வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ஓட்டங்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை விட 212 ஓட்டங்கள்; என்ற வலுவான முன்னிலையை பெற்றுள்ளது.

 

Related Articles

Latest Articles