“ பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இன ரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.”
– இவ்வாறு தேசிய மக்கள் சக்தி அரசைக் காட்டமாக விமர்சித்திருக்கின்றார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமமான க.வி.விக்னேஸ்வரன்.
யாழ்ப்பாணம், சேர் பொன் இராமநாதன் வீதியில் தமிழ் மக்கள் கூடடணியின் தலைமைச் செயலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“ இன்றைய அரசாங்கம் காணி அபகரிப்பு தொடர்பில் முன்னைய ஆட்சியாளர்களின் அதே மனோநிலையில் இருப்பதாகவே தென்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் 65 ஆயிரம் ஏக்கர் அரச காணிகள் இன்னமும் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைந்த தனியார் காணிகளே இன்றைய அரசாங்கத்தால் அவற்றின் சொந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
அரச திணைக்களங்கள் வடமாகாண காணிகளைக் கையேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. “ எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
எனினும் ஒரு சில பொது விடயங்களில் இந்த அரசாங்கம் நடந்து கொள்வது சரியானதாகவே படுகின்றது. நாட்டைச் சூறையாடியவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வர அயராது பாடுபடுகின்றார்கள். தாம் கையேற்ற பொருளாதார வங்குரோத்து நிலையை மேலும் சீரழிந்து போகவிடாமல் காப்பாற்ற பல வழிகளில் பாடுபடுகின்றார்கள்.
வன்முறையில் ஈடுபடும் பாதாளக் குழுக்களை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார்கள். போதை மருந்து வருகையையும் பாவனையையும் குறைக்கப் பாடுபடுகின்றார்கள்.
நான் எவ்வாறு முதலமைச்சராக இருந்த போது எனது அமைச்சர்கள் பற்றி ஊழல் முறைப்பாடுகள் வந்த போது அவற்றை மூடி மறைக்காமல் வெளிப்படுத்தி நீதி முறையான விசாரணைகளை ஆரம்பித்தேனோ அதேபோன்று ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பலர் சம்பந்தமாக அரசாங்கம் நீதிமுறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. அவர்கள் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
அதேவேளை, எமக்கு எதிரான அவர்களின் செயற்பாடுகளையும் நாம் அச்சம் இல்லாமல் சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.
குறிப்பாக, பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இனரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. இந்த நாட்டைப் பொருளாதார ரீதியாக வலுவான ஓர் அமைதி நிறைந்த நாடாகக் கட்டி எழுப்பப் போவதாகக் கூறுகின்றார்கள்.
ஆனால், இந்த நாட்டின் பூர்வீக மக்களான தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை மதியாமலும் தொடர்ந்து நசுக்கி வைத்திருப்பதன் ஊடாகவும் நிலையான சமாதானத்தையோ அல்லது வலுவான பொருளாதாரதையோ கட்டி எழுப்ப முடியாது என்பதே யதார்த்தமாகும். இதனை நான் கூறவில்லை.
முரண்பாடுகளுக்கான தீர்வு தொடர்பிலான வல்லுநர்கள் இதனையே கூறுகின்றார்கள். ஆகவே, தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி, சமஷ்டி ரீதியான தக்க அதிகாரங்களை வழங்க வேண்டும்.
தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு சமஷ்டி ரீதியான அதிகாரங்களை வழங்குவதே இலங்கையை ஆசியாவின் ஒரு நிலையான சமாதானமும், பொருளாதார வலுவும் மிக்க செழிப்பான நாடக ஆக்குவதற்கான ஒரே ஒரு இலகுவான அதேநேரம் விரைவானதுமான வழி ஆகும்.
சமஷ்டி என்று கூறாமல் கூட வடகிழக்கிற்கு சட்டப்படியான சுயநிர்ணய உரிமையைக் கையளிக்க முடியும். இதனைச் செய்தால், அரசாங்கம் எந்த ஒரு நாட்டிடமோ அல்லது சர்வதேச நாணய நிதியமிடமோ கை ஏந்த வேண்டியதில்லை.
ஆனால், என்.பி.பி. அரசாங்கம் இவ்வாறு செய்யும் அளவுக்கு யதார்த்தவாதிகளையோ, துணிச்சல்காரர்களையோ அல்லது இனவாதம் அற்றவர்களையோ தற்போது கொண்டிருக்கவில்லை என்பது எனது கருத்து.
குறைந்த பட்சம் அரசமைப்பில் இருக்கும் அரைகுறையான அதிகாரங்களைப் பெற்ற மாகாண சபைத் தேர்தல்களைக்கூட நடத்தி நாம் எந்த அதிகாரங்களையும் அனுபவிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனையில்த் தான் அரசாங்கத்தினர் இருக்கின்றார்கள்.
இந்த இடத்தில், இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் கரிசனை காட்டாது இருப்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியா ஏன் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்குத் தொடர்ந்து தயங்குகின்றது என்று தெரியவில்லை. “ – என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
		
                                    









