தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்க சமரை தொழிலாளர் தேசிய சங்கம் முன்னெடுக்கவுள்ளது.
இதன் ஆரம்பகட்ட போராட்டம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (28) டயகமவில் நடைபெறவுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கம், முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களும், செயற்பாட்டாளர்களும், மக்களும் பங்கேற்கவுள்ளனர்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. சம்பள நிர்ணயசபை ஊடாக நிர்ணயிக்கப்பட்ட ஆயிரம் ரூபாகூட இழுபறிக்கு மத்தியிலேயே வழங்கப்படுகின்றது.
நாட்டில் பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன, மூவர் உள்ள குடும்பமொன்றுக்கு ஒருவேளை உணவுக்குகூட ஆயிரம் ரூபா போதாது, எனவே, தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப நியாயமான சம்பளத்தை வழங்க கம்பனிகள் முன்வர வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.
