இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவை மற்றும் பெருந்தெருக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய போக்குவரத்துச் செயற்பாட்டுத் திட்டத்திற்கமைய, போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்காக “சாரதிகளுக்கான குறைபாட்டுப் புள்ளி முறைமை” (Demerit Points System) அறிமுகப்படுத்தப்படும் பரிசோதனை முயற்சியானது 2026 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 2027 மார்ச் மாதம் வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான தேசிய வேலைத்திட்டம் குறித்து விழிப்புணர்வூட்டும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் பத்தரமுல்லை, கொஸ்வத்தை, ‘மகநெகும மஹமெதுர’ வில் அமைந்துள்ள அமைச்சரவை மண்டபத்தில் இன்று (2026.09.28) நடைபெற்றது.
6 மாத விழிப்புணர்வு காலம்…
எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்குள் (2026 ஒக்டோபர் முதல் 2027 மார்ச் வரை) சாரதிகள் இப்பாதுகாப்பான முறைமையுடன் தங்களைப் பொருத்திக் கொள்ளவும், விழிப்புணர்வு பெறவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2027 மார்ச் மாதம் முதல் போக்குவரத்து விதிகளை மீறும் 33 குற்றங்களுக்காக இக்குறைபாட்டுப் புள்ளி முறைமை நாடளாவிய ரீதியில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கு இணையாக, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பின்டெக் (Fintech) செயலிகள் ஊடாக Gov-Pay மூலம் இணையவழியில் (Online) தண்டப்பணத்தைச் செலுத்தும் வசதிகளும் தற்போது முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்:
“வருடத்திற்கு 2,750 க்கும் மேற்பட்டோர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பதைத் கட்டுப்படுத்துவது அவசியமாகும். அதன் மூலம் உயிர் மற்றும் சொத்து அழிவுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாரிய இழப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு குடிமகனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது என்பது ஒரு சொத்தோ அல்லது உரிமையோ மட்டும் அல்ல; அதுவொரு பாரிய பொறுப்பாகும். இந்த ஆறு மாத பரிசோதனை முயற்சி மக்கள் இதனுடன் பழகிக் கொள்வதற்காக வழங்கப்படும் காலமாகும். இதன் உண்மையான தாக்கம், சட்டத்தை மதிக்காமல் வாகனங்களைச் செலுத்துபவர்கள் மீது மட்டுமே இருக்கும்.”
நிறுவனங்களுக்கு இடையிலான பங்களிப்பு…
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இச்சோதனை முயற்சிக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், LankaPay மற்றும் GovTech நிறுவனங்கள் இணைந்து பங்களிப்பு வழங்குகின்றன.
இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் அவந்தி சேனாரத்ன, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவ பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க, LankaPay நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சன்ன டி சில்வா உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
