சிறுத்தைப்புலியொன்று மரத்திலிருந்து கீழே பாய்வதைக்கண்டு அச்சத்தால் ஓட்டமெடுத்த இரு பெண் தோட்டத் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
பொகவந்தலாவை கிவ்தோட்ட பகுதியிலுள்ள 05 ஆம் இலக்க தேயிலை மலையிலேயே இன்று (26) முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழுந்து கொய்துகொண்டிருக்கையில் மரமொன்றிலிருந்து சிறுத்தைப்புலியொன்று கீழே பாய்வதை கண்ட தொழிலாளர், பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளார். பின்னர் தடுமாறி விழுந்தால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இப்பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் காணப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் தேடுதலில் ஈடுபட்டனர்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்