உரத்தை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தன்னிச்சையான முடிவால் சிலோன் டீ என்னும் நற்பெயர் அழிந்து போய்க்கொண்டிருப்பதாகவும், தேயிலை அறுவடை 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதன் காரணமாக, தேயிலைத் தொழில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது, தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் சரிந்துவிட்டது மற்றும் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு போதுமான தேயிலைக் கொழுந்துகள் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
காலி மாவட்டத்தில் உள்ள பத்தேகம தொகுதியின் வந்துரம்ப மாபொட்டுவன பகுதியில் தேயிலை விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய கொவி ஹதகெஸ்ம நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று (13) பங்கேற்றார்.
இரசாயனப் பொருட்கள் மற்றும் உரம் இல்லாமல் இந்நாட்டில் தேயிலை பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியாது என குழந்தைக்குக் கூடத் தெரியும் ஆனால் அரசுக்கு அது தெரியாது எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இந்த உரத் தடையானது இலங்கையின் சிலோன் டீ என்ற நற்பெயரை உலகிலிருந்து அழிக்கச் செய்யும் ஒரு சதி என்றும் அவர் கூறினார்.
பொதுவாக தேயிலை நாற்றுகளுக்கு டி -65 உரம் அவசியம் என்றும், தேயிலை நாற்றுகளுக்கு முறையான போசாக்கு கிடைக்காத போது தேயிலைச் செடி மற்றும் அதிலே வளருகின்ற தேயிலை மரம் மோசமடைந்து தரமான நாற்றுகளை பெறும் திறனை இழக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.