அமெரிக்கா எங்கும் உள்ள முக்கிய இராணுவத் தளங்களை வேவுபார்த்ததாகக் கூறப்படும் சீனாவின் இராட்சத பலூனை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியுள்ளது.
அமெரிக்க ஆட்புலத்தில் உள்ள கடல் பகுதிக்கு அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் உறுதி செய்துள்ளது.
இதற்கு சீனா கடும் அதிருப்தியை வெளியிட்டிருப்பதோடு, சிவிலியன்களின் அளில்லா விமானம் ஒன்றை அமெரிக்கா படைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட பலூனே திசைமாறிச் சென்றிருப்பதாக சீனா கூறுகிறது. அமெரிக்க அரசியல்வாதிகள் சிலரும் ஊடகங்களும் பலூன் விவகாரத்தை ஊதிப் பெரிதுபடுத்துவதாக அது சாடியுள்ளது.
சிறிய வெடிப்பு ஒன்றை அடுத்து அந்த பலூன் கடலில் விழும் காட்சியை அமெரிக்க தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன.
வானில் அதிக உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தின் மீது எப்–22 போர் விமானத்தை கொண்டு ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து அமெரிக்க கடற்கரைக்கு அப்பால் சுமார் ஆறு கடல் மைல் தொலைவில் விழுந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த பலூனின் பாகங்கள் தெற்கு கரோலினாவின். மைட்ல் கடற்கரைக்கு அருகில் 47 அடி ஆழமற்ற கடல் பகுதியில் விழுந்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்த பாகங்களை பெறும் நடவடிக்கையில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது.
இந்த பலூன் விவகாரம் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான இராஜதந்திர முறுகலை தீவிரப்படுத்தி இருப்பதோடு, இதனை சீனாவின் பொறுப்பற்ற செயல் என சாடிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிலிங்கன், கடந்த வார இறுதியில் இடம்பெறவிருந்தசீன சுற்றுப்பயணத்தையும் உடனடியாக இரத்துச் செய்தார்.










