ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் யார் வசம் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ளது என தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான சுதந்திரக்கட்சியின் குழுவொன்று நிர்வாக சபைக்கூட்டத்தை கூட்டி, பதில் செயலாளர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட
பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமித்துள்ளது.
பதில் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வா தெரிவுசெய்யப்பட்டார். இக்கூட்டத்தில் கட்சியின் போஷகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் பங்கேற்றிருந்தார்.
இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தேர்தல் ஆணைக்குழுவிடமும் கையளிக்கப்பட்டது. எனினும், இந்நியமனம் சட்டவிரோதம் என மைத்திரி தரப்பு விளக்கமளித்துள்ளது.
இந்நிலையிலேயே கட்சி யாப்பின் அடிப்படையில் புதிய நியமனம் செல்லுபடியாகுமா, தேர்தல் ஆணைக்குழு எந்த தரப்புடன் அதிகாரப்பூர்வமாக தொடர்புகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளது.