உள்ளாட்சிமன்ற தேர்தல் மார்ச் முதல் வாரத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு பிரதான அரசியல் கட்சிகளும், சுயேச்சைக்குழுக்களும் தயாராகிவருகின்றன.
இதன்படி வேட்புமனு பட்டியலை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி தொடர்பான பேச்சுகளையும் முன்னெடுத்துவருகின்றன.
ஆளும் கூட்டணியின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தெற்கில் மொட்டு சின்னத்தில் கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் பங்காளிகளின் சின்னத்தில் களமிறங்குவது குறித்தும் ஆராயப்பட்டுவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் தேர்தலை சந்திப்பதற்கான நகர்வுகளை முன்னெடுத்துவருகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் பரந்தப்பட்ட கூட்டணியை அமைத்து குட்டி தேர்தலை சந்திக்கவுள்ளது. எனினும், கிழக்கு மற்றும் மலையகத்தில் பங்காளிகளின் சின்னத்தில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோல ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்து விலகியுள்ள விமல் அணி, டலஸ் தரப்பு மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன ‘மக்கள் சுதந்திர கூட்டணி’யாக உள்ளாட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பேச்சுகளை முன்னெடுத்துவருகின்றன.
ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பரந்தப்பட்ட கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்கவுள்ளது.
மறுபுறத்தில் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் சுயேச்சையாக களமிறங்க திட்டமிட்டுள்ளனர். ஒரு சில போராட்டக்காரர்கள் பிரதான கட்சிகளுடன் இணையவுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் செயற்படும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன.