செங்கடலில் சரக்கு கப்பல் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 பணியாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் நால்வர் காயம் அடைந்துள்ளனர்.
யேமனின் ஏடன் துறைமுகத்தில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் Barbados கொடியுடன் பயணித்த கப்பல் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது 20 பணியாளர்கள் மற்றும் 3 பாதுகாப்பு தரப்பினர் கப்பலில் இருந்துள்ளனர். அவர்களில் இருவர் இலங்கையர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலை தொடர்ந்து கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
கப்பலில் இருந்த ஏனைய உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், கப்பலில் இருந்த இலங்கையர்கள் தொடர்பில் கடற்படை மற்றும் வெளிவிவகார அமைச்சிடம் வினவிய போது, தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் பெறப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
அதேவேளை இத்தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன. அத்துடன், செங்கடல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளன. அமெரிக்கா தலைமையில் செங்கடலில் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.