மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூமிநாதன், ஊவா மாகாண ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
செந்தில் தொண்டமானுக்கு பதுளையில் உள்ள பல பிரதேச சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினரகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் தமது ஆதரவை வழங்க முன்வந்துள்ள நிலையில், ஜே.வி.பியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி தரப்பில் பதுளை மாவட்டத்தில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதியாக செந்தில் தொண்டமானுக்கு பலமிக்க அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படும் என்று பதுளை மாவட்டத்தின் பொதுஜனபெரமுன தேர்தல் குழுத் தலைவர் தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், செந்தில் தொண்டமானுக்கு சிறுபான்மை சமூகத்தில் கிடைத்துவரும் ஆதரவு இரட்டிப்பாகியுள்ளது.