மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பகுதியில் இருந்து இன்று மண்டையோடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.
அந்தப் பகுதிகளில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமாகின.
இந்நிலையில் நேற்றைய அகழ்வின்போது அந்தப் பகுதியில் சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தது. இன்றைய அகழ்வில் மண்டையோடு ஒன்று அடையாளம் காணப்பட்டது. அதனை அகழ்ந்து எடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.