செல்பி எடுக்கச் சென்ற யுவதி மாயம்

அத்தனகலு ஓயா நீர்மானிக்கு அருகில் நீராடச் சென்ற 20 வயது யுவதி ஒருவர் செல்பி எடுக்கச் சென்ற போது வழுக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக நிட்டம்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன யுவதி, கொழும்பு குணசிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 20 வயதுடைய பாத்திமா பஸ்னா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி புறக்கோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் தன்னார்வ ஆசிரியையாக பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குணசிங்கபுரவில் வசிக்கும் குறித்த யுவதி தனது குடும்பத்தினருடன் நேற்று பிற்பகல் தமது உறவினர்கள் வசிக்கும் திஹாரியாவில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளார்.

யுவதி உட்பட 7 பேர் அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற நிலையில் யுவதி பாறையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தனக்கு நீச்சல் தெரியாது என்று கூறி உதவி கோரி அலறிய போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் வரை பொலிஸார் அப்பகுதி மக்களுடன் இணைந்து சிறுமியைக் கண்டுபிடிக்க முயன்றும் முடியாமல் போயுள்ளது. இதனையடுத்து கடற்படையினர் குழுவொன்றை வரவழைத்து யுவதியை தேடும் பணியை தொடர்வதாக நிட்டம்புவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

Related Articles

Latest Articles