இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் பதவி வெற்றிடமாக இருக்கும் நிலையில், தலைவர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதமளவில் இதற்கான தெரிவை செய்ய முடியுமா என்றும் கட்சியின் உயர்மட்டத்தில் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் தலைவர் பதவி வெற்றிடமாக இருந்து வருகிறது. இ.தொ.காவின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்ட நிலையில், தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி நீடித்து வருகிறது.
எவ்வாறாயினும் , தலைவர் பதவிக்கான நியமனங்கள் உடனடியாக மேற்கொள்ளப்படாது என்று, அந்தக் கட்சியின் உயர்பீடம் கூறிவந்த நிலையில், தற்போது அந்தப் பதவியில் பொறுத்தமான ஒருவரை அமர்த்த வேண்டும் என்று கட்சியின் உயர்மட்டம் ஆலோசித்து வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இ.தோ.கா.வின் பொதுச் செயலாளர் பதவி இளைஞர் ஒருவர் வகித்து வரும் நிலையில், தலைவர் பதவி அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வழங்கப்படுமா? இளம் வயதில் ஒருவருக்கு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் அந்தக் கட்சிக்குள் பேசப்பட்டு வருகிறது.
காங்கிரசின் தலைமைத்துவம் குறித்து போட்டியொன்ற நிலவக்கூடும் என்ற செய்திகளும் காங்கிரசிற்குள் பேசப்பட்டு வருகிறது.