” அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலமானது, தற்போதுள்ள சட்டத்தைவிட 100 மடங்கு பயங்கரமானது. அதனை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணை வேண்டும்.”
இவ்வாறு கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான ‘தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின்’ ஏற்பாட்டாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 1979 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது. புலிகளை ஒடுக்குவதே இதன் பிரதான நோக்கம். ஆனால் போர் முடிவடைந்த பின்னரும் அச்சட்டம் அமுலில் இருக்கின்றது. அது நீக்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமானது, இருந்ததைவிட 100 மடங்கு ஆபத்தானது. ஜனாதிபதிக்கு மன்னருக்குரிய அதிகாரங்களை வழங்கக்கூடியது. எனவே, கட்சி பேதமின்றி அனைவரும் அதனை எதிர்க்க வேண்டும்.” – என்றார்.
