இலங்கையின் தலைவிதி எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நிர்ணயிக்கப்படவுள்ளது.9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நிறைவுபெற்ற பின்னர், ஆன்மீக வழிபாடுகளில் அரசியல்வாதிகள் ஈடுபட்டுவருகின்றனர். ஆகஸ்ட் 16 முதல் பரப்புரை போர் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்களும்
வேட்பாளர்களும்
இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கின்ற தேர்தலாக ஜனாதிபதித் தேர்தல் கருதப்படுகின்றது. 1978 அரசமைப்பு ஊடாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஜே.ஆர். ஜயவர்த்தன பதவி வகித்தார்.
முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தல் 1982 இல்தான் நடைபெற்றது. அந்தத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜே.ஆர். ஜயவர்த்தன, சுதந்திரக் கட்சி சார்பில் ஹெக்டர் கொப்பேகடுவ, ஜே.வி.பி. சார்பில் ரோஹண விஜேவீர, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம், லங்கா சம சமாஜக் கட்சி சார்பில் கொல்வின் ஆர் .டி .சில்வா, நவ சமசமாஜக் கட்சி சார்பில் வாசுதேவ நாணயக்கார ஆகிய 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. கடைசியாக 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தல் ஆணைக்குழுவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தால் கட்சி சார்பில் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம். சுயேச்சையாக போட்டியிடுவதாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்திருக்க வேண்டும். வயது, இலங்கைப் பிரஜை உட்பட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மேலும் சில தகைமைகளும் உள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தால் 50 ஆயிரம் ரூபாவும், சுயேச்சையாக போட்டியிடுவதாக இருந்தால் 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாகச் செலுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு கட்டுப்பணத் தொகை குறைவாக இருப்பதால் அரசியல் நோக்கங்களுக்காகவும், இதர தேவைகளுக்காகவும் பிரதான கட்சிகளால்’டம்மி’ வேட்பாளர்கள் களமிறக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது.
ஊடகப் பிரசாரத்தை பெற்றுக்கொள்ளுதல், தேர்தல் ஆணைக்குழுவால் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை கட்சிகளுக்கு பெற்றுக்கொள்ளுதல், எதிர் வேட்பாளர்களுக்கு சேறுபூசுதல், மக்களை திசை திருப்பல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக பிரதான கட்சிகளால் இவ்வாறு டம்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படும் அசிங்கமான அரசியல் கலாசாரம் இலங்கையில் உள்ளது.
பிரதான வேட்பாளர்கள்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள், பிரதான வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோருவதும், இறுதி நேரத்தில் தேர்தலில் இருந்து ஒதுங்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச் சீட்டு அச்சிடுதல் உட்பட தேர்தலுக்கென அதிக செலவு ஏற்படுகின்றது. வாக்குச் சீட்டு நீள்வதால் மக்களுக்கான தேர்வு சுதந்திரத்திலும் இடையூறு ஏற்படுகின்றது.
இம்முறை 39 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவ்வாறு பலர் போட்டியிட்டாலும் பிரதான வேட்பாளர்களாக சிலரே கருதப்படுகின்றனர்.
சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையிலேயே மும்முனைப் போட்டி நிலவுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் களமிறங்கியுள்ள நாமல் ராஜபக்ச, சர்வஜன அதிகாரம் சார்பில் போட்டியிடும் திலித் ஜயவீர, தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் விஜயதாஸ ராஜபக்ச, மக்கள் போராட்ட முன்னணி சார்பில் போட்டியிடும் சட்டத்தரணி நுவான் போபகே, சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகா ஆகியோரும் ஜனாதிபதி தேர்தல் களத்தில் பேசப்படும் நபர்களாக உள்ளனர்.
தமிழ் எம்.பிக்களின் நிலைப்பாடு?
இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், வியாழேந்திரன், ஜீவன் தொண்டமான், வேலுகுமார் உட்பட 10 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சஜித்துக்கான ஆதரவை வெளிப்படுத்தி இருந்தாலும், வேலுகுமார் எம்.பி. கட்சி தாவியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் முயற்சியால் தமிழ்ப் பொதுவேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார்.
ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், அந்தக்கட்சி உறுப்பினரான வினோநோகராதலிங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். புளொட் சித்தார்த்தன் தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சியில் பங்கேற்றுள்ளார். அந்தவகையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பக்கம் நான்கு தமிழ் எம்.பி.க்கள் உள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு எம்.பி,க்களும், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதற்கு அறைகூவல் விடுத்துள்ளனர். எனினும், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பதென தமிழரசுக் கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் முடிவெடுக்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவான அங்கஜன் ராமநாதனும் தான் யாருக்கு ஆதரவு என்பதை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
வாக்காளர்களின் எண்ணிக்கை
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 17 லட்சத்து 65 ஆயிரத்து 351 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 18 லட்சத்து 81 ஆயிரத்து 129 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 244 பேரும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
யாழ்.. தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 187 பேரும் (யாழ். – 492,280, கிளிநொச்சி 100, 907) வன்னி மாவட்டத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 81 பேரும் ( வவுனியா 128,585, மன்னார் 90,907, முல்லைத்தீவு 86,889) வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 686 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 5 லட்சத்து 55 ஆயிரத்து 432 பேரும் , திருகோணமலை மாவட்டத்தில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 925 பேரும் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.
இம்முறை தென்னிலங்கையில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் வடக்கு, கிழக்கு வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக அமையும். இந்நிலையில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ள விடயம் பிரதான கட்சிகளைக் கிலிகொள்ள வைத்துள்ளது.
கூட்டணிகள்
ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி ஓகஸ்ட் 08 ஆம் திகதி உதயமானதுடன், கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, சுதந்திரக் கட்சியின் தயாசிறி அணி என்பன கூட்டணியில் இணைந்து, கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவை உறுதிப்படுத்தின.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்கவும் இந்தக்கூட்டணியில் இணைந்துள்ளார். மேலும் சில கட்சிகளும், சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் கூட்டணியில் இணைந்துள்ளன. ரிஷாட் பதியுதீன் கூட்டணியில் இணைந்துள்ளார். சம்பிக்கவும் சங்கமித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பலமான கூட்டணியை அமைத்துள்ளது. முன்னாள் படை அதிகாரிகள், அரச ஊழியர்கள் என பலரும் அந்தக்கூட்டணியுடன் இணைந்து பயணித்துவருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ள தரப்புகள் இயலும் ஸ்ரீலங்கா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. சுமார் 34 கட்சிகள் ஜனாதிபதிக்கு ஆதரவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும்போக்குடைய சிங்கள தேசிய வாத கட்சிகளும், அமைப்புகளும் இணைந்தே சர்வஜன அதிகாரம் எனும் கூட்டணியை உருவாக்கியுள்ளன. விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் இக்கூட்டணியிலேயே அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.