மாகாண சபைகளுக்கு அதிகாரப்பகிர்வு அவசியம். அச்சபைகளை மக்கள் பிரதிநிதிகளே ஆள வேண்டும். எனவே, உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.
பதுளையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாகும். பல வருடங்களாக இக்கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றி சந்திக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குரிய முக்கிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.
அதேவேளை, மாகாணசபைகளை ஆளுநர்கள் ஊடாக ஆள்வது ஜனநாயகம் அல்ல. எனவே, தமது பிரச்சினைகளை தமது பிரதிநிதிகள் ஊடாக தீர்த்துக்கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். மாகாணசபைகளுக்கு அதிகாரப்பகிர்வு அவசியம். எனவே, தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்றார் டிலான் பெரேரா.










