” நாட்டில் நீதிமன்ற கட்டமைப்பு உள்ளது. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது.” – என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) கமல் குணரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” கடந்த காலங்களில் வன்முறையை தூண்டி, பொலிஸார் தாக்கி, மிகவும் கீழ்த்தரமான விமர்சித்தவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அத்தகையவர்களுக்காக நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகின்றனர். அதுமட்டுமல்ல சில சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்குள் கைதட்டுகின்றனர். இப்படியான நடவடிக்கையால் பொலிஸார் உள ரீதியில் பாதிக்கப்பட்டனர்.
சிலர் தவறான வழியில் பணம்தேடி வீடுகளை நிர்மாணித்து இருந்தால், அதற்கு எதிராக செயற்படுவதற்கு நாட்டில் சட்ட கட்டமைப்பு உள்ளது. இப்படியான பிரச்சினைகளை காட்டாட்சிமூலம் தீர்க்க முடியாது. எவரும் சட்டத்தை கையில் எடுத்து செயற்படவும் முடியாது.
அதேவேளை, போராட்டக்காரர்கள் எனக் கூறப்படுபவர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் உள்நுழைந்த பின்னர், அங்கிருந்த நீச்சம் தடாகத்தில் சவக்காரம் போட்டு குளிக்கும் காட்சியும் வெளியானது.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது. அந்த நாடுகளில் உள்ளவர்கள், அந்த சம்பவத்தை வைத்து எம்மவர்களை ஏளனமாக பார்த்தனர். ” – என்றும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.