டயானா ‘அவுட்’ – ஹிருணிக்கா ‘இன்’ – நடக்கபோவது என்ன?

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் காலடி எடுத்துவைத்து, பின்னர் குத்துக்கரணம் அடித்து இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட  டயானா கமகேயின் அரசியல் இருப்பு ஆட்டம் காண தொடங்கியுள்ளது.
இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகிப்பதற்கு அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டை பயன்படுத்தி, டயானா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கை பிரஜை அல்லர் என முறைப்பாட்டாளர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் தீர்ப்பு இன்னும் வெளியாகத போதிலும், டயானாவுக்கு எதிராகவே தீர்ப்பு வருமென ஐக்கிய மக்கள் சக்தி நம்புகின்றது.
இந்நிலையில் டயானாவின் இடத்துக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்துள்ளது. பெண் பிரதிநிதியொருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த வாய்ப்பை ஏற்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார்.மக்கள் ஆசியுடனேயே தான் சபைக்கு வருவார் எனக் கூறியுள்ளார்.
எனவே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டாரவை தேசிய பட்டியல் ஊடாக சபைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

Related Articles

Latest Articles