சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடக ஆர்வலர் ஓஷல ஹேரத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (20) முறைப்பாடு செய்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டு தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
டயானா கமகே பிரித்தானிய பிரஜாவுரிமையை வைத்திருப்பதாகவும் அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குவது இலங்கையின் குடிவரவு மற்றும் புலம்பெயர்ந்தோர் சட்டத்தை மீறும் செயலாகும் என ஓஷல ஹேரத் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஓஷல ஹேரத், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.










