டெஸ்ட் கிரிக்கெட்: பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதலிடம் – ஆறாவது இடத்தில் இலங்கை வீரர்

இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகு, உலக டெஸ்ட் தரவரிசையில் பந்து வீச்சாளர்களுக்கான பிரிவில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ஜஸ்பிரித் பும்ரா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முக்கியமான முதல் இன்னிங்ஸில் 4 முக்கிய விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியாவை 106 வெற்றிக்கு அழைத்து சென்றார்.

உலக கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி அறிவித்திருக்கும் நிலையில், டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வினை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இதன்மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு முன் பும்ராவின் அதிகப்படியான டெஸ்ட் தரவரிசையாக 3ம் இடத்தையே பிடித்திருந்தார். பும்ராவிற்கு முன்னதாக 1979ம் ஆண்டு கபில்தேவ் மட்டுமே அதிகப்படியாக டெஸ்ட் தரவரிசையில் 2வது இடம்பிடித்த இந்திய வேகப்பந்துவீச்சாளராக இருந்தார். பும்ராவிற்கு முன் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இருந்த ஜகீர் கான் கூட அதிகப்படியாக 3வது இடத்தையே பிடித்திருந்தார். இந்நிலையில் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளராக மாறி சாதனை படைத்துள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

அதேவேளை, இலங்கை அணி பந்து வீச்சாளரான பிரபாத் ஜயசூரிய 6 ஆவது இடத்தில் உள்ளார்.

Related Articles

Latest Articles