‘டோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம்’ – ரிஷாப் பண்ட்

டோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னை போன்ற சிறிய வீரர்களை ஒப்பிடுவது நல்ல விடயம் அல்ல என்று இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷாப் பண்ட் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு டெல்லி வந்திறங்கிய இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷாப் பண்டிடம், உங்களை டோனியுடன் ஒப்பிட்டு பேசுகிறார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு 23 வயதான ரிஷாப் பண்ட் கூறுகையில்,

‘டோனி போன்ற மிகச்சிறந்த வீரருடன் என்னை நீங்கள் ஒப்பிட்டு பேசுவது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை, எந்த வீரருடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை. இந்திய கிரிக்கெட்டில், எனக்குரிய அடையாளத்துடன் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

டோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னை போன்ற சிறிய வீரர்களை ஒப்பிடுவது நல்ல விடயம் அல்ல. ஆஸ்திரேலிய தொடரில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து ஒட்டுமொத்த அணியினரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்றார்.

சிட்னி டெஸ்டில் 97 ரன்களும், பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன்களும் விளாசி ரிஷாப் பண்ட் ஹீரோவாக ஜொலித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles