தங்கம் வென்ற குட்டித் தீவு : வரலாற்றுச் சாதனை

வெறும் 63 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான பெர்முடா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

அந்த நாட்டின் வீராங்கனை ஃப்ளோரா டஃப்பி டிரையத்லான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

33 வயதான அவருக்கு இது நான்காவது ஒலிம்பிக் போட்டி. நீச்சல், ஓட்டம், சைக்கிள் ஆகியவை கலந்த டிரையத்லான் பந்தயத் தொலைவை அவர் ஒரு மணி நேரம் 55 நிமிடம் 36 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

ஒலிம்பிக் வரலாற்றில் பெர்முடா நாட்டுக்குக் கிடைத்திருக்கும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இந்தச் சாதனையை பெர்முடா மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

பதின்ம வயதாக இருந்தபோது பிரிட்டனுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை மறுத்தவர் டஃப்பி.

டஃப்பி பங்கேற்ற 51 கி.மீ. தொலைவு கொண்ட டிரையத்லான் போட்டி, அவரது நாட்டின் மொத்த அகலத்தையும் விட அதிகமானது. வெறும் 40 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தீவுதான் பெர்முடா.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா, பிரிட்டன் முடியாட்சியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நாடாகும்.

டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு பெர்முடா சார்பில் இரண்டு பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். டஃப்பி தவிர துடுப்புப் படகுப் போட்டியில் டாரா அலிசாடே பங்கேற்றுள்ளார்.

Related Articles

Latest Articles