மருதானை லோகட் லேன் பிரதேசத்திலுள்ள வியாபாரி ஒருவரின் வீட்டில் 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய சந்தேக நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர்.சதுரங்கவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் லோகட் லேன் பாலத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்று வளைப்பின் போது 47 வயதுடைய சந்தேகநபர் 6377மில்லி கிராம் ஹெரோயினுடனும், இரும்பு அலவாங்குடனும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட நகைகள் வாழைத்தோட்டத்திலுள்ள அடகு வைக்கும் நிலையத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளன என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட் டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










