தண்டவாள ஆணிகளை அகற்றும் போதைப்பொருள் அடிமைகள்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் போதைப்பொருள் வாங்குவதற்காக  புகையிரத தண்டவாளங்களில் உள்ள ஆணிகள், இரும்புத் துண்டுகள் ஆகியவற்றை அகற்றுவதால் பெரும்பாலான புகையிரதங்கள் தடம் புரள்கின்றன.

இவ்வாறானவர்கள் தொடர்பில் அறியக் கிடைத்தால் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க வேண்டும் என புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

புகையிரத திணைக்களத்தில் இன்று புதுன்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்று (27) மாலை 4 மணியளவில் கொஸ்கம நோக்கி பயணித்த பயணிகள் புகையிரதம், பேஸ்லைன் புகையிரத நிலையத்துக்கும் கோட்டே ரோட் புகையிரத நிலையத்துக்கும் இடையிலான பகுதியில் தடம் புரண்டது.

புகையிரத என்ஜின் உட்பட மூன்று புகையிரத பெட்டிகள் இவ்வாறு தடம் புரண்டன. இதனால் களனிவெளி பாதையின் புகையிரத சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டன.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள்  தண்டவாளங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆணிகள், இரும்புத் துண்டுகள் ஆகியவற்றை அகற்றுகிறார்கள். இவ்வாறான சம்பவம்தான் பேஸ்லைன் – கோட்டே ரோட் புகையிரத நிலையத்தை அண்மித்த புகையிரத பாதையில் இடம்பெற்றுள்ளது. இதனால் புகையிரதம் தடம் புரண்டது.

போதைப்பொருள் பாவனையாளர்கள் தாம் செய்வது எவ்வளவு பெரிய பாரதூரமான செயல் என்பதை அறிவார்களா என்பது தெரியவில்லை. இவ்வாறு வெறுக்கத்தக்க செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களில் அல்லது புகையிரத பாதுகாப்பு தரப்பினரிடம் முறைப்பாடு அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles