தந்தையும் மகனும் கொரோனாவுக்கு பலி!

கொழும்பு ரோயல் கல்லூரியின் முன்னாள் கிரிக்கட் வீரரும், கல்லூரியின் கிரிக்கட் கழக உறுப்பினருமான சுல்கி மொஹமட் மற்றும் அவரது தந்தையான மருதானை சாஹிரா கல்லூரியின் பிரபல ரக்பி வீரர் இப்ராஹிம் ஹமீட் ஆகியோர் இரண்டு நாட்களுக்குள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் வசித்து வந்த சுல்கி மொஹமட் நேற்றும் (20) அவரது தந்தை இப்ராஹிம் ஹமீட் நேற்று முன்தினமும் (19) உயிரிழந்துள்ளனர்.

1991-92 காலப்பகுதியில் சுல்கி ஹமீட் கொழும்பு ரோயல் கல்லூரியின் கிரிக்கட் அணியில் விளையாடியிருந்த பிரபல வீரராவார். இவர் ஒரு விக்கட் காப்பாளரும், சிறந்த துடுப்பாட்ட வீரரும் ஆவார்.

சுல்கியின் தந்தை இப்ராஹிம் மருதானை சாஹிரா கல்லூரியின் பிரபல ரக்பி வீரராவார். 1971 காலப்பகுதியில் பொலிஸ் ரக்பி அணிக்கு தலைமை வகித்தவர். இவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தனது பணியை நிறைவு செய்துள்ளார். இவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதியானJ.R. ஜெயவர்தனவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாகவும் அவர் செயற்பட்டார்.

தகப்பனும் மகனும் சமீபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

ஒரு வாரமாக மருத்துவமனையில் இருந்து சுல்கி ஹமீட் 19ஆம் திகதி வீடு திரும்பியிருந்த நிலையில், நேற்று (20) காலை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.

சுல்கியின் தந்தை இப்ராஹிம் ஹமீட் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles