கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த போதிலும், இதுவரையில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தனிமைப்படுத்தப்படவில்லை.
கெஸ்பேவேவில் உள்ள போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்கேயின் இல்லத்தில் இயங்கி வரும் அவரது காரியாலயத்தின் ஊழியர்கள் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காமினி லொக்குகேவின் மருமகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, மருகமனின் சாரதி என அந்த வீட்டிலிருந்த 11 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பிலிருந்த காமினி லொக்குகே நேற்று (09) வரையில் தனிமைப்படுத்தப்படவில்லை.
இது தொடர்பில் கெஸ்பேவ சுகாதார அதிகாரிகளுடன் தொடர்புக்கொண்டு வினவியபோது, “தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய அமைச்சர் காமினி லொக்குகே தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதுத் தொடர்பில் அவருக்கு அறிவுறுத்தியும் அவர் அதனை கேட்கவில்லை.
தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவர், பல கூட்டங்களில் கலந்துக்கொள்வதுத் தொடர்பாகவும் எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. தனியார் வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை செய்துக்கொண்டுள்ளதாக காமினி லொக்குகே கூறுகின்றபோதிலும், அந்த அறிக்கையில் நெகடிவ்வா? பொசிடிவ்வா? என்பைத அவர் இதுவரையில் கூறவில்லை.” எனப் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்களிலும் முகக் கவசம் அணியாத சாதாரண அப்பாவி மக்களை, பாரியக் குற்றச் செயல்களில் ஈடுபட்டக் குற்றவாளிகளைப் பிடிப்பதுபோல நான்குப் பொலிஸார் தூக்கிச் செல்லும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பொதுமக்கள் செய்யும் சாதாரணக் குற்றங்களுக்குக்கூட கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் இந்நாட்டில், அரசியல்வாதிகளின் இதுபோன்ற பாரதூரமான சட்டமீறல்கள் தொடர்பில் பொலிஸார் ஒருபோதும் கண்டுக்கொள்வதில்லை என்பது இதுபோன்ற சம்பவங்களில் மேலும் உறுதியாகியுள்ளது.
தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தமைத் தொடர்பில் தனியார் ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் காமினி லொக்குகே, இதுவரையில் தன்னை தனிமைப்படுத்த பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் தனது வீட்டுக்கு வரவில்லை என்கிறார்.
ஊடகவியலாளர் – பா. நிரோஸ்
