” குருணாகல் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றது. தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறிச்செயற்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளது. அச்சட்டத்தைமீறும் வகையில் எவராவது செயற்பட்டால் அவர்களை கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இருக்கின்றது. நேற்றைய தினம்கூட தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறிய 755 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் களியாட்ட நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மரண சடங்குகள்கூட கடும் கட்டுப்பாட்டுகளுக்கு மத்தியிலேயே இடம்பெறவேண்டும். இதற்கான சுகாதார வழிகாட்டல்கள்கூட வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் வரவேண்டும், நாடும் மக்களும் தொற்று அபாயத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக குருணாகல் பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பிரித் ஓதும்’ ஆன்மீக வழிபாட்டு நிகழ்வு பொலிஸ் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
நேற்றைய தினமும் ஆன்மீக நிகழ்வு நடைபெற்றது. இதில் குருணாகல் மாநகர மேயர் துஷார சஞ்சீவ விதாரணவும் பங்கேற்றார். நேற்று மேயரின் பிறந்தநாள் என்பதால், பொலிஸாரால் ‘கேக்’ வெட்டுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளைமீறியே ‘கேக்’ வெட்டப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் கடும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. சட்டத்தை சரிவர அமுல்படுத்த வேண்டிய தரப்பே, சட்டத்தைமீறும் வகையில் செயற்படுவதை அனுமதிக்கலாமா என்ற தொனியிலும் கருத்தாடல் இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ஹோரன இச்சம்பவம் தொடர்பில் இன்று நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலொன்றின்போது கருத்து வெளியிடுகையில்,
” இத்தகைய நடவடிக்கையை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கொண்டாட்டம் குறித்த காணொளியும் கிடைத்துள்ளது. இது தொடர்பில் வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடினேன்.
விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸாரால் இப்படியான நிகழ்வை (பிறந்தநாள்) ஏற்பாடு செய்யமுடியாது.” – என்றார்.
