கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனியார்துறை ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒதுக்கீட்டு சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையில் ஜே.வி.பி. கிளர்ச்சி காலத்திலும், ஏன் போரின்போதும்கூட உரியவகையில் வரவு – செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்படவில்லை. இலங்கை அரசியல் வரலாற்றில் பட்ஜட் முன்வைக்கப்படாத ஆண்டாக அது அமைந்தது.
அதேபோல சுதந்திரத்துக்கு பின்னர் அரசாங்கமொன்றால் கடந்த வருடமே அதிக கடன் பெறப்பட்டுள்ளது. ஆனால் அதன்மூலம் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.தங்க ஆபரணங்களை அடகுவைத்து வாழ்க்கையை கொண்டுசெல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடன் அட்டைகளுக்கான கொடுப்பனவுகளைக்கூட செலுத்துவதற்கு மக்களுக்கு வருமானம் இல்லை.
இலங்கையில் தனியார் துறையில் 60 லட்சம்பேர் பணிபுரிகின்றனர். இதில் 17 லட்சம்பேர் நாட் சம்பளத்தை நம்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் 50 வீதம், 75 வீதம் என சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. 1ஆம் அலையின்போது ஒரு லட்சம்பேர் தொழில் இழந்தனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த தொகை மேலும் அதிகரித்திருக்கும். நிலைமை இப்படி இருக்கையில் தனியார்துறைமீது அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. அவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் ஆர்ஜென்டினா போன்ற நாடுகளில் அரசாங்கமே சம்பளத்தை வழங்கிவருகின்றது. ” – என்றார்.