தமிழ்க் கட்சிகளையும் அரவணைத்து பயணிப்போம் – விமல் அணி!

“ இலங்கை மேலவை கூட்டணி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். வடக்கு, கிழக்கையும் உள்ளடக்கிய வகையில் அதன் செயற்பாடுகள் அமையும்” – என்று இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போட அரசு பல்வேறு வழிமுறைகளைத் தற்போது முன்னெடுத்துள்ளது. 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தேர்தல் என்பது நாட்டு மக்களின் உரிமை அதனைப் பாதுகாப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளதால் தேர்தலைப் பிற்போட அரசு அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுக்காது என எதிர்பார்க்கின்றோம். நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது.

இலங்கை மேலவை கூட்டணி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக அறிவிப்பு எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். எதிர்க்கட்சிகளுடன் ஆரம்பகட்ட பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம். பரந்துபட்ட அரசியல் கூட்டணியை நிச்சயம் அமைப்போம்” – என்றார்.

Related Articles

Latest Articles