“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு” என்ற கோட்டையின் மணி மகுடம் தனக்கு வேண்டுமென அடம்பிடித்துவருகின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.
சோழ பேரரசை சுந்தர சோழர் கட்டிகாத்ததுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பேரரசை சம்பந்தன் ஐயா பாதுகாத்து வந்தார்.
சோழ தேசத்தில் சுந்தர சோழர் நோய்வாய் பட்ட பின்னர், அடுத்த பேரரசர் பற்றி சிற்றரசர்கள் சிந்திக்க தொடங்கினர்.
அதேபோல்தான் சம்பந்தன் ஐயா நோய்வாய்பட்ட பின்னர் கூட்டமைப்பின் தலைமைப்பதவி குறித்தும், நாடாளுமன்ற குழு தலைவர் பதவி பற்றியும் பங்காளிக்கட்சி தலைவர்கள் என்ற சிற்றரசர்களிடம் கருத்தாடல் இடம்பெற்றுவந்தது.
சோழ பேரரசின் பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனின் மரணம், சிற்றரசர்களின் சூழச்சி உள்ளிட்ட விடயங்களால் சுந்தர சோழரின் இறுதி காலம் சோக மேகம் சூழ்ந்ததாகவே இருந்தது.
அப்படிதான் தீபாவளிக்கு தீர்வு, பொங்களுக்கு தீரவு, சுதந்திர தினத்துக்கு முன்பு தீர்வு என ஏமாற்றங்கள் தொடர்ந்தாலும், தலைமைப்பதவிக்கான சண்டைகளாலும் சம்பந்தன் ஐயாவின் கடைசி காலமும் துன்பங்களால் சூழப்பட்டிருக்கும்.
சம்பந்தன் ஐயா மறைந்துவிட்டார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலம்தொட்டு அவரே நாடாளுமன்றக்குழு தலைவராக இருந்து வழிநடத்தினார். அவருக்கு முடியாத கட்டம் ஏற்பட்டபோது அவரின் சார்பில் சுமந்திரன் செயற்பட்டார். எனினும், நாடாளுமன்ற குழு தலைமைப்பதவியில் சம்பந்தன் பெயரளவில் தொடர்ந்தார்.
ஆனால் தற்போது நாடாளுமன்ற குழு தலைமைப்பதவி செல்வத்தாருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை ரெலோ முன்வைத்துள்ளது. அதற்கு புளொட் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் கூட்டமைப்பின் பிரதான பங்காளியான இலங்கைத் தமிழரசுக் கட்சி அதற்கு இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை. அதற்கு காரணமும் உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பேரரசு கட்டியெழுப்பட்டதன் பின்னணியில் ஆயிரம் தியாகங்கள் உள்ளன. தமிழர்களின் போராட்ட வடிவம் அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர வழியிலும் தொடர வேண்டும் என்ற உன்னத நோக்கி உருவாக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஓரிரு தரப்புகள் வெளியேற, தமிழரசு, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப் என்பன பயணத்தை தொடர்ந்தன.
காலபோக்கில் ஈபிஆர்எல்எப்பும் வெளியேறியது. கடைசியாக உள்ளாட்சிசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு ரெலோ, புளொட் என்பன இணைந்து, சில சிற்றரசர்களை (கட்சிகளை) இணைத்துக்கொண்டு கூட்டமைப்பு தமக்கே உரியது என வாதிட்டன. தமிழரசுக் கட்சிக்கு எதிராக அரசியல் போர் தொடுத்தன.
தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் வந்ததை மறந்து, தனிவழி பயணத்துக்கு தயாராகின. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பேரரசைக் கட்டியெழப்பவும் அரசியல் சூழ்ச்சி செய்தன.
பழுவேட்டையர்கள் சோழ பேரரசுக்கு பக்கபலமாக இருந்ததுபோல, சித்தரும், செல்வத்தாரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பக்கபலமாக இருக்கவில்லை. அவ்வப்போது அரசியல் சூழ்ச்சிகளில் ஈடுபடவே செய்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பேரரசில் இருந்து வெளியேறிய பின்னர், சிற்றரசர் செல்வத்தாருக்கு மணி மகுடம் வழங்குமாறு கோருவதில் உள்ள அறம்தான் என்ன?
குறைந்தபட்சம் சம்பந்தன் ஐயாவின் மறைவின் பின்னர், ஒற்றுமை கருதி மீண்டும் தமிழ்க் கூட்டமைப்புக்குள் வந்துவிட்டோம், புதிய கூட்டணியுடனான உறவு இல்லை என்ற அறிவிப்பை விடுத்துவிட்டு, மணிமகுடத்தை கோரி இருந்தால்கூட அதில் நியாயம் இருந்திருக்கும்.
கூட்டணியில் இருந்து வெளியேறவும் முடியாது, மணிமகுடமும் வேண்டும் என அடம்பிடித்தால் என்ன செய்வது?
ஒற்றுமை என்பதே தமிழர்களுக்கு தற்போதுள்ள மிகப்பெரிய ஜனநாயக ஆயுதம். அந்த ஒற்றுமையும் சீர்குலைந்தால் கடவுளால்கூட எம்மக்களை காக்க முடியாமல்போகும் என்றதை கூற தந்தை செல்வா வரவேண்டியதில்லை. காலம் ஆயிரம் பாடங்களை தெளிவாக கற்றுக்கொடுத்துள்ளது.
அடுத்த தேசிய மட்டத்திலான தேர்தல்களின்போது வெவ்வெறு நிலைப்பாடுகளை எடுத்து, முரண்பட்டுக்கொண்டு தனிவழி பயணங்களை தொடர்ந்தால் அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்கான ஜனநாயக சமரில் அது பெரும் பின்னடைவாக அமையும்.
முதலில் கூட்டமைப்பு என்ற பேரரசைக் காத்துக்கொள்ளுங்கள், இல்லையேல் ஆபத்துதவிகள் ஊடுருவி மணிமகுடத்தை மட்டுமல்ல கோணவத்தையும் உருவிவிடும்.
தமிழரசு என்ற பேரரசைக் காக்க வேண்டிய கடப்பாடு தமிழரசு, புளொட், ரெலோ உட்பட அனைத்து தரப்புகளுக்கும் உள்ளன. ராஜ ராஜ சோழன் வந்த பிறகு சோழக்கொடி கடல் கடந்தும், கண்டங்கள் தாண்டியும் பறந்தன. அதுபோல கூட்டமைப்பின் தலைமைப்பதவிக்கு வருபவர் கூட்டமைப்பை பலப்படுத்தக்கூடியவராகவும், அனைவரையும் அரவணைத்து இலக்கை நோக்கி பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுக்ககூடியவராகவும் இருக்க வேண்டும். அதுவே தமிழர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும்.
ஆர்.சனத்










