கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதற்கு ஆளுங்கட்சியிலுள்ள பேரினவாதிகள் சக்கர வியூகம் வகுத்து செயற்படும் நிலையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி ஒட்டுமொத்த சமுகத்தையும் காட்டிக்கொடுக்கும் வகையில் செயற்படும் தமிழ் அரசியல் துரோகிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கம்பளை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் வேட்பாளர் வேலுகுமார் மேலும் கூறியதாவது,
“ ஜனாதிபதித்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களும் தமிழ்பேசும் மக்களை புறக்கணிக்கும் வகையிலும், அவர்களை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணத்துடனுமே செயற்பட்டுவருகின்றனர்.
சிங்கள, பௌத்த வாக்குகளால்தான் தான் வெற்றிபெற்றேன் என்று ஜனாதிபதி வீராப்பு பேசுகிறார். மறுபுறத்தில் வாக்குகளுக்காக தமிழ், முஸ்லிம் மக்களிடம் கையேந்தமாட்டோம் என இனவாதிகள் கொக்கரிக்கின்றனர்.
அதுமட்டுமல்ல சிறுபான்மையின மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்மீது அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் என்றெல்லாம் முத்திரை குத்தப்படுகின்றது. இந்த நாட்டில் உண்பதற்கு மட்டுமே தமிழ் பேசும் மக்கள் வாய்திறக்கவேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு.
இம்முறை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யவேண்டும் அல்லது இருப்பதை குறைக்கவேண்டும் என்பதற்காகவே எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டும், பிறப்பால் மாத்திரமே தமிழர்களான சில கறுப்பாடுகளை, கைக்கூலிகளை ராஜபக்ச அணி வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது. அவர்களால் வெற்றிபெறமுடியாது. ஆனால், வாக்குகளை சிறதடித்து பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யமுடியும். எனவே, இப்படியான சதிகார கும்பலை மக்கள் வாக்குரிமை என்ற ஆயுதத்தின் ஊடாக கறுவறுக்கவேண்டும். அவர்களுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும், எமது சமுகத்துக்கு எதிராக வழங்கப்படும் வாக்குகளாகும்.
கண்டி மாவட்டத்திலும் இப்படியான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர். இருந்தாலும் மக்களின் மனதை மாற்றுவதற்கான முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். எது எப்படியோ கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது கண்டி தமிழர்களின் அடையாளம் மட்டுமல்ல சுயகௌரவமும்கூட. அதனை எந்தவொரு காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்ககூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர்.
வெற்றி வேட்பாளராக நானே இருக்கின்றேன். எனக்கு வாக்களிப்பதன்மூலமே பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்பது மக்களுக்கு தெரியும். ” – என்றார்.
