“சலுகை அரசியலை மலையக மக்கள் நிராகரித்துவிட்டனர். தமக்கு சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகளையே அவர்கள் பாராளுமன்றம் அனுப்புவதற்கு தயாராகிவிட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தேர்தல் காலங்களில் மாத்திரம்தான் சில அரசியல் வாதிகள் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வருகின்றனர். மக்களை தமது உறவுகள் எனக் கூறிக்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல மக்களுடன் மக்களாக வாழும் எம்மையும் விமர்சிக்கின்றனர். காங்கிரஸ் எதையும் செய்யவில்லை எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் சமூகத்துக்கு என்ன செய்துள்ளது என்பது எமது மக்களுக்கு தெரியும். தேர்தல் காலத்தில் மட்டுமல்ல எல்லா சந்தர்ப்பங்களிலும் நாங்கள்தான் தோட்டங்களுக்கு வருவோம். தேர்தலின் பின்னர் காணாமல்போக மாட்டோம். எமது மக்கள் பிரச்சினை எமக்கு நன்கு தெரியும். தோட்டங்களில் எமது பிரதிநிதிகள் உள்ளனர். நாங்கள்தான் மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடியவர்களாக உள்ளோம்.
நாம் உரிமையுடன் வந்து வாக்கு கேட்கின்றோம். செய்த சேவைகளை சுட்டிக்காட்டிவருகின்றோம். ஆனால் காங்கிரஸ் எதையும் செய்யவில்லை எனக் கூறியே சிலர் அரசியல் நடத்திக்கொண்டுள்ளனர். மக்களுக்கு சலுகைகளைக்காட்டி வாக்குகளைப் பெறுவதற்கு சில சுயேச்சைக்குழுக்கள் முற்படுகின்றனர். கோவிலுக்கு பெயின்ட் வாங்கி கொடுத்தால் மக்கள் வாக்களித்துவிடலாம் என கருதுகின்றனர்.
எமது மக்களும், இளைஞர்களும் தெளிவாக உள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர். இந்த தேர்தலானது எமது சமூகத்துக்கும் மிக முக்கியமான தேர்தலாகும். எமக்கான சமூக இறுப்பு என்பதும் அவசியம். சிறுபான்மையின சமூகம் பலமாக இருப்பதுதான் பாதுகாப்பாகும்.” – என்றார்.