“தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை வடக்கு, கிழக்குக்குள் வைத்துக்கொள்ளுங்கள், அந்த கோரிக்கையுடன் வடக்கு, கிழக்குக்கு வெளியே வந்துவிடவேண்டாம், அவ்வாறு வந்தால் அதனை எதிர்ப்போம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தமிழ் பொதுவேட்பாளர் புது வேட்பாளராக இருப்பார் என எதிர்பார்த்தேன், ஆனால் அவர் பழைய வேட்பாளர்தான், இந்த முயற்சியை நான் அதிகாரப்பூர்வமாக எதிர்க்கவில்லை. அத்தகைய பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடிய உரிமை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இருக்கின்றது, இதனை அங்குள்ள கட்சிகள் எதிர்ப்பதற்கும் உரிமை இருக்கின்றது. அந்தவகையில் பொதுவேட்பாளர் முயற்சி எதிர்க்கப்படுவதையும் நாம் அங்கீகரிக்கின்றோம், ஆதரிக்கப்படுவதையும் அங்கீகரிக்கின்றோம்.
எனினும், வடக்கு, கிழக்குக்கு வெளியில் மட்டும் அந்த கோஷத்துடன் வந்துவிடாதீர்கள் என்றுதான் சொல்கின்றோம், அவ்வாறு வந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் வடக்க, கிழக்குக்கு வெளியில் வாழும் மக்களுக்கு அது சந்தோஷமான விடயமாக அமையாது.
தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளார் என்ற குற்றச்சாட்டு கொழும்பில் முன்வைக்கப்பட்டது. இதனை நான் கூறவில்லை, சில ஊடகங்களில்கூட தகவல்கள் வெளியாகின.” – என்றார்