போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்களின் ஒத்துழைப்பின்றி ஜனாதிபதியை தெரிவுசெய்யும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ் மக்களுக்கு விசேடமாக எதனையும் வழங்கவேண்டியதில்லை என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் துளியும் மாறவில்லை. நாட்டைகூறுபோடும் விதத்திலான தீர்வையே கோருகின்றனர். அதற்கேற்ற வகையிலேயே தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுவருகின்றன.
இம்முறை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பிரிவினைவாத சிந்தனைகளே உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே, அதனை அரசாங்கம் நிராகரிக்கவேண்டும். அவ்வாறு இல்லாது ஏற்கும்பட்சத்தில் ராஜபக்சக்களுக்கு ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
உள்நாட்டுபோர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதியொருவர் தமிழ் பேசும் மக்களின் ஆதரவு இன்றி வெற்றிபெறலாம் என்பதும் கடந்த ஜனாதிபதி தேர்தல்மூலம் உறுதியானது. ஆகவே, தமிழர்களுக்கு விசேடமாக எதனையும் வழங்கவேண்டியதில்லை.” –என்றார்.